×

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் செங்கை கலெக்டருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

செய்யூர்: சித்தாமூர் அருகே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மீது உரிய தீர்வு காணும்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள சரவம்பாக்கம் கிராமத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர்களாக உள்ளனர்.  இந்த கிராமத்தின் அருகே தனியாருக்குச் சொந்தமான 2 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இந்த கல்குவாரிகளால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குவாரிகளில் வெடிக்கப்படும் வெடிகளால் கிராமத்தில் உள்ள குடியிருப்புகள், கிணறுகள் சேதமடைந்து வருகின்றன. இதனால் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமமக்கள் தெரிவித்திருந்தநிலையில், கடந்த 19ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்கு சாவடி எண்கள் 254, 255 ஆகிய இரண்டிலும் 479 பேர் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்ததோடு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நிறைவடைந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் அக்கிராமத்திற்குச் சென்று கிராம மக்களின் குறைகளை கேட்டறியவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்தித்து அங்குள்ள பிரச்னை குறித்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.  அதன்படி விரைவில் அக்கிராமத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

The post நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் செங்கை கலெக்டருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Sengai Collector ,Seyyur ,Chengalpattu District Collector ,Chittamur ,Saravambakkam ,Chittamur, Chengalpattu district ,Senkai Collector ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...